திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அம்பட்டனும் ப்யூட்டிஷ்யனும்-கார்ப்பரேட் கத்திரிகள்

  மக்கள் திரள் முழுவதையும் நுகர்வோராக மட்டுமே மாற்றியுள்ளது இன்றைய வணிக நடைமுறைகள். மக்களின் இன்றியமையாத தேவைகளைப் பட்டியலிடுவது தொடங்கி எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது வரை ஒவ்வொரு  நிறுவனமும் மக்களுக்குக் கற்பிக்கின்றன. தண்ணீர், காய்கறி, பழங்கள், உணவு, ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாவற்றிலும் தரம் நிர்ணயிக்கப்பட்டு மக்களை நுகர நிர்பந்திக்க்ன்றன அதன் தயாரிப்பு நிறுவனக்கள். எதைக் குடிப்பது , உண்ணுவது, உடுத்துவது என நம் விருப்பங்கள் அனைத்திலும் இவற்றின் குறுக்கீடும் நிர்பந்தமும் உண்டு. இவர்கள் தேசம் தழுவி கண்டம் தாண்டி பன்னாட்டளவில் செயல்படுகின்றனர்.


  ஒரு குறிப்பிட்ட மக்கள் திரள் அதாவது உயர் மத்திய தர வர்க்கத்தினரை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்நிறுவனங்களின் வியாபார முயற்சிகள் நாளடைவில் சமூகத்தின் அனைத்துப்  பிரிவு மக்களுக்குமானதாக விரிவாக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் , துரித உணவுகள், ஆயத்த ஆடைகள், ஆயத்த உபயோகப்புருட்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் போன்ற அனைத்துப் பொருட்களின் நுகர்வோர்களாக மக்கள் மாற்றப்படுகின்றனர். ஒரு சமூகத்தின் மரபான உணவுப்பொருள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, மருத்துவ அறிதல்கள் போன்ற அறிவு மரபுகள் சிதைக்கப்படுகின்றன. இவற்றைச்செய்துவந்தவர்களின் வாழ்வாதாரங்கள் ஒடுக்கப்படுகின்றது. இவ்வகையான துறைகளில் நவீன வளர்ச்சிகளை உள்வாங்குதல் என்பது வேறு; மரபான அறிவு மரபுகளை இழப்பது என்பது வேறு. தமிழகத்தின் மரபானத்தொழில் நுட்பர்களாகக் கருதப்படுகின்ற மரவேலை செய்வோர், நெசவாளர், குயவர், வண்ணக்கலவையாளர், மருத்துவர் போன்றோரின் வாழ்வில் இன்றைய தொழில் நுட்பமும் முதலாளித்துவமும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிப்பது அவசியமாகிறது.


  மேற்குறித்த துறைகள் ஒவ்வொன்றிலும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகள், மாற்றங்கள் பற்றியும் அத்தொழில்களில் முதலீடு செய்து லாபமடையும்முதலாளிகள் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகள் எழுதுவது அவசியம். மருத்துவர், நாவிதர் என்றழைக்கப்படும் சாதியின் குடித்தொழில்கலுள் ஒன்றாகக் கருதப்படுவது முடிவெட்டுதல் முகம் மழித்தல் ஆகியன. மருத்துவர்களாகவும் வைத்தியர்களாகவும்   தமிழகக் கல்வெட்டுக்களில் அறியப்படும் இவர்கள் எக்காலத்திலிருந்து சவரத்தொழிலில் ஈடுபட்டனர்; ஈடுபடுத்தப்பட்டனர் எனும் பண்பாட்டாய்வை வேறொரு கட்டுரையில் எழுதலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலங்களில் இத்தொழில் செய்வதால் நாவிதர்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. பட்டியல் சாதியினர் தவிர்த்து பிற சாதியினர்க்கு அவரவர் வீட்ட்ற்குச்சென்று மழித்து முடிதிருத்தும் வேலை இவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருந்ததும் அத்ற்குக் கூலியாக வருடத்திற்கு இரண்டு நெற்கட்டும் ஒரு நாளின் இருவேளை சோறெடுத்தலும் கட்டாயமாக்கப்பட்டிருந்ததையும் அறியமுடிகின்றது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டபோது இவற்றின் எச்சத்தைப் பல கிராமங்களில் இன்றும் காணமுடிகின்றது. இவ்வகையான சமூக இழிவுகளை மீறும் நடைமுறைகளாக  சலூன் கடைகள் திறக்கப்படுதலை புரிந்துகொள்ளலாம். இதன்மூலம் சவரம் செய்துகொள்வோர் இக்கடைகளுக்கு வந்து செய்துகொள்வதோடல்லாமல் கூலியாக மேரைக்குப்பதில் பணம் ப்ர்றும் வழக்கமும் தொடங்கியது. சலூன் கடைகள், இச்சாதியினரின் சமூக பொருளாதார நிலைகளில் ஏற்படுத்திய மாற்றங்களை இவ்விதம் புரிந்துகொள்ளலாம்.  சவரத்தொழில் நாளடைவில்  அடைந்த மாற்றங்களை அழகு பற்றி மக்களிடையே உருவாக்கப்பட்ட கருத்து நிலைகளோடு இணத்துப் பேச முடியும். முடி திருத்தும் கடை என்பதிலிருந்து அழகு நிலையங்களாக இவை உருமாற்றப்படுகின்றன. இவ்வகையான் மாற்றங்களைச் செய்வோர் யாரென்பதும் அவர்களின் சமூகப்பிண்ணனியும் இங்கு முதன்மை கேள்விகளாகின்றன.


  குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாட்டு மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் அழகு பற்றிய பிம்பங்கள் என்பவை அடிப்படையில் வியாபார நலன்கள் சார்ந்த ஒன்றாக இருக்கின்றன. இயல்பில் நாம் ‘அழகற்றவர்கள்’ என்றும் நம்மை அழகாக்கும் வழிமுறைகள் உண்டென்றும் மக்கள் போதிக்கப்படுகின்றனர். இப்போதனைகளைச் செய்வதில் பன்னாட்டு நிறுவனங்களும் ஊடகங்களும் முன்னிற்கின்றன. இதில் உள்ளூர்  நிறுவனக்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் பெரும்பங்குண்டு. தங்கள் நிறுவனத் தயாரிப்புகளைக் குறிப்பாக அழகு’ சாதனப் பொருட்களைச்சந்தைப்படுத்தும் பொருட்டு மக்களிடையே அழகு பற்றிய கற்பிதங்களை ஊடகங்களின் உதவியுடன் இவை செய்துமுடிக்கின்றன. இதன் தொடர் நிகழ்வாகவே அழகிப்போட்டிகள் நிகழ்த்தப்பெறுவதை நாம்  அறிவோம். சிறந்த அழகிகளாகத் தெரிவு செய்யப்படுவோர் வள்ரும் நாடுகளைச்சார்ந்தவர்களாக இருப்பது தற்செயலானதல்ல.  தமது தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அழகியரின் நாடுகளில் சந்தைப்படுத்த பெரு நிறுவனங்கள் மேற்கொள்ளும் தந்திரமாக இதைப் புரிந்துகொள்ளலாம்.


   இப்பின்புலத்தில், அழகு சாதனப்பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தனது பொருட்களைச் சந்தைப்படுத்த சலூன்களைத் தெரிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தயாரிப்புகளைத் தனியாகச் சந்தைப்படுத்துவதைவிட சலூன் கடைகளை வேறொரு தளத்திற்கு மாற்றி அதன்மூலம் சந்தைப்படுத்துதல்  இவர்களுக்கு எளிதாகிறது. இப்புள்ளியில்தான் அழகுசாதன்ப்பொருட்கள் தயாரிக்கும் உள் நாட்டு முதலாளிகளும் உயர் சாதியினரும் பன்னாட்டு நிறுவனங்களும் ஒன்றினைகின்றனர். பெரு நகரங்களில் இவர்களால்தான் சவரக்கடைகள் அழகு நிலையங்களாக மாற்றமடைந்து வருகின்றன்.


  இன்றைக்கும் கிராமங்களில் இழிதொழிலாகவே கருதப்படும் இத்தொழில் நகர்ப்புறங்களில் பெரும் முதலாளிகள், உயர்சாதியினர் ஆகியோரின் கூட்டுறவில் வேறொரு வடிவம் எடுப்பதைக் காணமுடிகிறது. நட்சத்திர ஹோட்டல்களிலும் தனியாகவும் இவ்விதக்கடைகள் செயல்படுகின்றன. குளிரூட்டப்பட்ட அறைகள், சொகுசு இருக்கைகள் என பல்வேறு அம்சங்களுடன் இக்கடைகள் உருவாக்கப்படுகின்றன. வழமையான சவரக்கடைக்குள் செல்லும் உணர்வு சிறிதுமின்றி  நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையொன்றில் இருப்பதான உணர்வே தோன்றும். இங்கு அறை எனக்குறிப்பிடுவது பல்வேறு அறைகள் கொண்ட பெரும் பகுதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் முதலீடு செய்பவர்களாகத் திரைத்துறையினர், என் ஆர் ஐ க்கள், மென்பொருள் துறையின் அதிகரிகாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள் போன்றவர்களும் பார்ப்பனர், முதலி,  பிள்ளை போன்ற் சாதியினரும் இருக்கின்றனர்.


  நகர்ப்புறங்களில் உயர் மற்றும் இடைநிலை, பட்டியல் சாதியினர் வேறு ’நல்ல’ வேலை கிடைக்காததாலும் வறுமையின்  பொருட்டும் சவரத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது வேறு விசயம். ஆனால் நிறுவனங்கள், பெரும்பணக்காரர்கள் லாபனோக்கில் இத்தொழிலில் செய்யும் முதலீடுகள் குறித்து விவாதிப்பதென்பது அவசியமான ஒன்று.


   பொதுச்சமூகத்தால் இன்றும்  இழிதொழிலாகக் கருதப்படும் இத்தொழிலில்  பெரும் முதலீடுகளைச் செய்து லாபமடையும் நிறுவனங்களில் சில..

  naturals,    green trends,     lime lite,     block&white,    studio profile,    studio essential,         braight&white,     lakme,     reliance     போன்றவற்றைக்  குறிப்பிடலாம். இந்நிறுவனங்கள்  ஒவ்வொன்றும் தமிழகத்தின் பல பகுத்திகளில் பல கிளைகளைக்  கொண்டுள்ளன. சென்னையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளை   'நேச்சுரல்ஸ்'   நிறுவனம் கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும்      20  க்கும் மேல் பல நகரங்களில் கிளைகளைக்கொண்ட நிறுவனம் இது.

  green trends,     lime lite    போன்ற அழகு நிலையங்கள் cavin care னிறுவனத்திற்குச் சொந்தமானவை. இதற்கும் தமிழகம்முழுக்க கிளைகள் உண்டு.    lakeme    எனும் அழகு சாதனப்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதாக அறியமுடிகின்றது.               (பாலு- நேச்சுரல்ஸ்)    

  இதுபோன்ற நிலையங்களின் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் எவரும் நாவிதர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். மாறாக வேலை செய்யும் ஆட்கள் 95% நபர்கள்  நாவிதர் சாதியைச் சார்ந்தவர்கள்.(முனுசாமி-சவரத்தொழிலாளர் நலச்சங்கம்)   cavin care    நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஊ.மு.ரங்கனாதன் பார்ப்பனர். இவரின் சகோதரர் ஜெகதீஷ்        naturals     இன் உரிமையாளர் ஆவார்.   block&white   மற்றும்   bright&white    இன் உரிமையாளர்கள் கணக்குப்பிள்ளை சமூகத்தவர்கள். இவ்விறண்டு நிறுவனngகளுக்கும் தமிழகம் முழுக்க தலா 20க்கும்  அதிகமான் கிளைகள் உண்டு.

  இந்த அழகு நிலையங்கள் அனைத்தும் இருபாலருக்குமானவை என்பது குறிப்பிடத்தக்கது. சில நிலையங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தனித்தனிப் பிரிவுகளுடன் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையங்களின் பெயர்களுக்கீழ்       unisex,      saloon & spa,        family saloon & spa        எனும் குறுவாசகங்கள்    இடம்பெறுவதைக்காணலாம்.   spa    என்பது  மசாஜ் செய்வதைக்குறிக்கின்றது.

  மேற்குறித்த   நிறுவனங்கள் அனைத்திற்கும்  சொந்த  பயிற்சி  மையங்கள் உள்ளன. அவற்றில் பயிற்சி பெற  பயிற்சிக்குத் தகுந்தாற்போல ரூ. 20000 முதல் 100000 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு  நாளும்  புதுப்புது  முகம்  மற்றும்  மழித்தல்   தலைப்பூச்சு  முறைகள்       குறித்து தொழிலாள்ர்கள்    பயிற்றுவிக்கப்படுகின்றனர்.   நாவிதர் சாதி இளைஞர்கள்    இந்நிலையங்களில்   பணியமர்த்தம்    செய்யப்படும்  முன் அவர்களின் தொழில் திறன் பரிசோதிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்தி கத்திரித்தல், மழித்தல், அழகுபடுத்தல், மசாஜ் செய்தல் என பலவாறாகப் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.இவர்கள் முகம் மழித்துக்கொள்ள வருபவரை பல்வேறு முகப்பூச்சு, மயிர்க்கு வண்ணமிடல் ஆகியவற்றச்    செய்துகொள்ளும்படி  தூண்ட வேண்டும்.


  இந்நிறுவனங்களின்   ஒவ்வொரு கிளைக்கும்   மாதம்   குறிப்பிட்ட        இலக்கு    நிர்ணயிக்கப்படுகிறது.     மூன்று லட்சம்   முதல்   பத்து   லட்சம் வரை    இலக்குகள் அமைகின்றன.    கிளைகள்    அமைந்துள்ள பகுதிகளைப்  பொறுத்து   இலக்குகள் வேறுபடுகின்றன. குறிப்பிட்ட   இலக்கை   எட்டாத கிளையின் பொறுப்பாளரை  ,ஊழியர்களை அவமதித்தல், கிளைக்குள் மாற்றம், பணி நீக்கம் என தண்டிக்கப்படுகின்றனர்.(    கதிரவந்    green trends)     இப்பெரு  நிறுவனங்களின்   கிளைகளி   எதாவதுரு   பகுதிகளில் அமைத்துக்கொள்ள விரும்புவோர்    40 முதல் 75 லட்சம்   வரை நிறுவனத்தலைமைக்குச் செலுத்த வேண்டும்.   70:30,    60:40 என்ற   அளவில் வருவாய்ப் பகிர்வின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்கள்        செய்யப்படுகின்றன.    நாவிதர் சாதி   இளைஞர்கள்   naturals     குழுமத்தின் பெயரில் கடை திறக்க அணுகியபோது இவ்விவரம் தெரியவந்துள்ளது.  கிராமங்களில் தரமான  கல்வி பெறும் வாய்ப்பின்றி குலத்தொழிலில்  ஈடுபட நேர்ந்த இவர்கள் இம்மாதிரியான கடைகளின் பங்குதாரர்களாக முடியாமல் போவது       இப்பின்புலத்தில்தான்.


   பெண்களுக்காக மட்டும் நடத்தப்படும் அழகு நிலையங்கள் பெரும்பாலும் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியி  னுடையவை.  (குருநாதன் - சவரத்தொழிலாள், அமைந்தகரை)    ஆண்களின் ‘அழகை’ விட பெண்களின் ‘அழகு’ குறித்து   உள்ளூர்   மற்றும்   உலக   முதலாளிகளின்   அக்கறை கூடுதலானது.    சென்னையிலுள்ள  பெரும்பாலான   பெண்கள்  அழகு நிலையங்களின் உரிமையாளர்களாக அரசியல்வாதிகள், காவல் மற்றும் வருவாய்த்துறை   உயரதிகாரிகள்     இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.(மேலது)

  அதிகார மையங்களில்    இருப்பவர்களால்    நடத்தப்படும்    இந்த நிலையங்களின்   பெண் வாடிக்கையாளர்களை    பாலியல் தொழிலில் ஈடுபடவும்   தூண்டுகின்றனரெனச் சொல்கின்றார் குருநாதன். பொதுவாக இந்த கார்ப்பரேட் அழகு நிலையங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் வடகிழக்கு மாநிலத்தச்  சேர்ந்தவர்களாவர். அங்கு நிலவும் அரசியல் சமனற்ற சூழலின் காரணமாக குறைந்த ஊதியத்திற்கு இவர்களின் உழைப்பு இங்கு சுரண்டப்படுகின்றது. இதுவன்றி கார்ப்பரேட் சவரக்கடைகள் இப்பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது குறித்து நமது ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன.   block&white     நிறுவனத்தின் முதலாளி ரமேஷ்  தன் நிறுவனத்தில் பணியாற்றும் வடகிழக்கு மா நிலத்தைச்    சேர்ந்த        பெண்களை        பாலியல்   தொழிலில்   ஈடுபட   கட்டாயப்படுத்தியதை  எதிர்த்து  அப்பெண்கள் கூட்டாக காவல் துறை ஆணையரைச் சந்தித்து புகார் அளித்ததையும் ரிப்போர்ட்டர்    இதழ் 2011ல்  எழுதியதை   இங்கு   கவன்ப்படுத்திக் கொள்ளலாம்.


    தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற மூன்று    சவரத்தொழிலாளர்       சங்கங்கள்    உள்ளன.    இவை எதிலும்     தங்கள்    நிறுவனக்களையோ கிளைகளையோ  தொழிலாளர்களையோ இவற்றின் முதலாளிகள் பதிவு செய்துகொள்ள  அனுமதிப்பதில்லை.    வாரம்,  மாதம்  ஒரு நாள் விடுமுறையும் அளிப்பதில்லை.   சங்கத்தின் எந்த   விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்ற மறுப்பதாகச் சொல்கிறார்   சவரத்தொழிலாளர்                 சங்கச்  செயலர்    முனுசாமி.


  இன்றைக்கும்  இழிதொழிலாகக் கருதப்படும்         சவரத்தொழில், நகர்ப்புறங்களில்      பல்பரிமாணங்களோடு    ‘வளர்ச்சி’    யை     எட்டியுள்ளதும்      பல இன சாதியைச்   சார்ந்தவர்கள்    இத்தொழிலைச் செய்வதும்   பெரும் பணக்காரர்கள்   இதில்   முதலீடு செய்வதும் வரவேற்கத்தக்கது.    ஆனால் கொழுத்த லாபம் சார்ந்து    சவரத்தொழிலின் இழிவை மறந்து    அதில் ஈடுபடும்   உயர்சாதியினர்தான் கிராமப்புறங்களில் இத்தொழில் குறித்த   இழிவை    உருவாக்குபவர்களாகவும்     குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் மீது    அந்த இழிவைச்   சுமத்துபவர்களாகவும்           இருப்பது    எவ்வளவு      பெரிய    நகைமுரண்.      இன்றைக்கும் மேரைக்கும்      2 ரூபாய் 5 ரூபாய்க்கெல்லாம்     சவரம் செய்யச்சொல்லி நிர்பந்திக்கப்படும் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.    பிணத்திற்குச் சவரம் செய்யக் கட்டாயப்படுத்துவதும் இடுப்பிற்குக் கீழ் சிரைக்கச் சொல்லும் நிகழ்வுகள்      தொடர்வதாகச்  சொல்கின்றார்  சவரத்    தொழிலாளர்    நலவாரிய     உறுப்பினர்     திரு.பழனிமோகன்   அவர்கள்.           நகர்சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள         இத்தொழிலின்    ‘வளர்ச்சிகள்’        சமூக அங்கீகாரங்கள்     என்பவை     இச்சாதியினர் குறித்தும்     சவரத்தொழில் குறித்தும்   நம் சமூகத்தின்   பொதுக்கருத்தை     மாற்றிவிடவில்லை     என்பதை    கவனம்   கொள்ள   வேண்டியிருக்கின்றது.

1 கருத்து:

  1. Thanks for this blog. In front of Corporate dominance and social unawareness, poor communities are helpless. Education is the only tool to break this chain.

    பதிலளிநீக்கு